மத்தியான வேலையில
வயக்காட்டு மேடையில
பூவாடை வீசயில
பாவாடை நெனப்புத்தான் !
ஒத்தையடி பாதையில
ஒத்தையா நீ போகையில
உன்னோட வந்ததெல்லாம்
என்னோட உசுரு தான் !
கொலுசு போட்ட பாதத்துல
நெருஞ்சி முள்ளு குத்தையில
உனக்கு முன்ன துடிச்சதெல்லாம்
என்னோட மனசு தான் !
வெள்ளாவி வெளுக்கையிலே
வெள்ளை சோறு பொங்கையில
வளந்த பருத்தி வெடிக்கையிலே
பளிச்சின்னு உன் மொகம் தான் !
ஏரெடுத்து உழுகையில
எருமைக்கண்ணு மேய்க்கையில
ஏரிக்கரையில் குளிக்கையிலே
என் சோடி நெனைப்பு தான் !..
நெலா காயும் ராத்திரி
வெளிச்சந்தரும் பூத்திரி
வாடை காத்தில் ஆடுதடி
உடம்பெல்லாம் வேகுதடி !..
கருகமணி போட்ட புள்ள
உதட்டோரம் செவந்த புள்ள
என் உசுர பிரிச்சி எடுத்த
காரணந்தான் என்ன புள்ள ?
காஞ்சமரம் பூத்திருக்கு
கொத்துக்கொத்தா காய்ச்சிருக்கு
சோடிகிளிக்கு தெரியலையா
பக்கம் வர புடிக்கலையா !..
ஒத்தச்சொல்லு சொன்னியே
நிக்கவச்சி கொன்னியே
மண்ணத் தள்ளி பொதச்சாலும்
மனசுக்குள்ள நின்னியே !..
குருவி காக்கா கோழி கூட
நெனைச்ச உடனே கூடுதடி …
பாழா போன மனுசனுக்கு
சாதி சனம் தடுக்குதடி …
கம்மாக்கரை ஓரத்துல
சாயுங்கால நேரத்துல
கண்ணு ரெண்டும் ஈரத்துல
என் குருவி தூரத்துல !..
ஒத்தையில நின்னாலும்
சாதி சனம் கொன்னாலும்
என் உசுரு உனக்காக
சத்தியமா வரும் புள்ள …
சத்தியமா வரும் புள்ள !!!…