தொண்ணூறு வயசுல
தடி ஊணி நடக்கறப்ப கூட,
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் …
என் பாட்ட அவ ரசிக்கணும் …
கையோட கை சேர்த்து
மடி மேல தலை சாய்ச்சி,
அவ கண்ண பாக்கறப்ப
முப்பது வயசுல மொளைச்ச காதல்
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும் …
காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் …
சுருக்கம் விழுந்த கையால
இறுக்கமா அவளை புடிச்சி
நெருக்கமா பக்கம் வந்தாலும்
வெட்கத்துல அவ விலகி போகணும் …
ஓரக்கண்ணால அவ வெட்கத்த
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு,
அந்த காதோர மச்சத்துக்கு
கம்பனா நான் மாறனும் …
கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும்
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும்
உள்ளங்கையில் அவளை வச்சி
உயர பறந்து தாண்ட வேணும் …
பேரன் பேத்தி எடுத்த வயசுல
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய
உற்சாகமா காதல் செய்யணும் …
கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் …
பேரக் குழந்தைங்க ஆளான பொறவும்
என் மாரு மேல தான் அவ தூங்கணும்
காலம் முடிஞ்சி போனதை கூட
தெரியாம தான் நாங்க போகணும் !…
உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் …
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும்
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும் !…