இனிதாய் விடியும் பொழுது
சுகமாய் மலரும் விழிகள்
அணைப்பில் உறங்கும் மனைவி
அழகாய் சிணுங்கும் குழந்தை
விழிக்கும் திசையில் புத்தகம்
மனதை சிலிர்க்கும் கவிதை
உதட்டின் ஓரம் புன்னகை
பனியில் குளிக்கும் பூக்கள்
தென்றல் மிதக்கும் வீதி
புல்லில் நடக்கும் கால்கள்
பறக்க துடிக்கும் இதயம்
நடந்து வியர்த்த தேகம்
பரந்து விரிந்த ஏரியில்
தாவி குதித்து குளியல்
ஆடை இல்லா உடலும்
தேவை இல்லா மனமும்
கரையில் புரளும் அலையும்
ஒருங்கே ஒன்றாய் இணையும்
பொழுதில் விடியும் சூரியன்
உரக்க கூவும் சேவல்
வேகமாய் கரையும் காகம்
காதில் தேனாய் கருங்குயில்
கீச்சுக்குரலில் சிட்டுக்குருவி
தேகம் தொடும் இளவெயில்
கசக்கி கட்டிய கந்தை
பசுமை போர்த்திய கிராமம்
கலப்பை சுமக்கும் கடவுள்கள்
வாசல் தெளிக்கும் தெய்வங்கள்
துள்ளி குதிக்கும் ஆடுகள்
குட்டியை வருடும் மாடுகள்
காலை சுற்றும் நாய்க்குட்டி
காம்புக்கனவில் குழந்தைகள்
சொர்க்கத்தின் வழியே நடைபயணம்
மூவருக்கு தோதாய் சிறுகுடில்
மெதுவாய் திறக்கும் கதவு
தேனீர் கோப்பையில் காதல்
நெற்றியின் நடுவே சிறுமுத்தம்
சிணுங்கலுடன் விழிக்கும் மனைவி
ரசித்து பருகும் பார்வை
அணைத்து கடந்த நிமிடங்கள்
நடுவில் நுழைந்த தேவதை
பிரித்து விட்டதாய் சிரிப்பு
கழுத்தை சுற்றும் கைகள்
தாடியை வெறுக்கும் கன்னங்கள்
கொல்லைப்புறத்தில் சிறுகுளியல்
கோழிக்குஞ்சுகளுடன் உரையாடல்
சீருடை மாற்றிய சில்வண்டு
மிதிவண்டியில் பள்ளி பயணம்
வாழ்க்கையை போதிக்கும் ஆசான்
அறிவை துளைக்கும் கேள்விகள்
சிந்திக்க தூண்டும் பதில்கள்
அலைகடலென மாணவர்கள்
தொடர்வண்டியாய் பாடங்கள்
ஓய்வறியா வேளையிலும்
தாய்மையாய் உணரும் நிமிடங்கள்
மணி அடித்ததா? அணை திறந்ததா?
சிட்டாய் பறக்கும் சிறுகுழந்தைகள்
ஆடுபுலி ஆடும் கிழவர்கள்
ஊர்நியாயம் பேசும் கிழவிகள்
திண்ணையில் கூடும் நண்பர்கள்
கலகலக்கும் கிண்டல் பேச்சுக்கள்
காரசாரமாய் அரசியல் பேச்சுக்கள்
மெதுவாய் மறையும் சூரியன்
குங்குமம் சூடும் வானம்
கூடு திரும்பும் பறவைகள்
அகல் விளக்கேற்றிய வீடுகள்
மனைவியின் தினச்செய்திகள்
குழந்தையின் மழலை சாகசங்கள்
நெல்லுச்சோறுடன் அயிரைமீன் குழம்பு
மார்பில் உறங்கும் குழந்தை
அருகில் வருடும் மனைவி
நொடியில் மலரும் உறக்கம்
(இனிதாய் விடியும் பொழுது…)
முகப்பு > வலைப்பதிவுகள்