தமிழ் இலக்கியங்கள் ஏன் புரிவதில்லை?

16 Sep 2018

முகப்பு > வலைப்பதிவுகள்

ஒரு சினிமா பாட்டை கேட்கும் போது நமக்கு நன்றாக புரிகிறது. நவீன காலத்து கவிஞர்கள் எழுதும் கவிதையைப் படிக்கும் போது நமக்கு நன்றாக புரிகிறது. ஆனால், சங்க காலம் தொட்டு எழுதப்பட்ட இலக்கியங்கள் நமக்கு புரிவதில்லை. ஏன் என்று யோசித்தீர்களா?

என்னால் தமிழில் எழுத, படிக்க, பேச முடியும். தமிழில் கவிதைகள் கூட எழுத முடியும். ஆனால் தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய சங்க இலக்கியங்களில் ஏதாவது ஒரு இலக்கியத்தை, என்னால் உரையின்றி படித்து புரிந்து கொள்ள முடியாது. ஏன் இந்த நிலைமை?

அதற்கான காரணங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்க்கும்போது, மூன்று விசயங்கள் தெளிவாகின்றன.

காரணம் 1: இலக்கியங்கள் படிப்பதற்கு கடினமாக உள்ளன.

ஒவ்வொரு இலக்கியமும் குறிப்பிட்ட இலக்கண விதிகளின்படி எழுதப்பட்டுள்ளது. அந்த இலக்கண விதிகளுக்கும், அந்த பாடலுக்குரிய எதுகை மோனைக்கும் தகுந்தாற்போல் வார்த்தைகள் அமையாத பட்சத்தில், சொற்களை பிரித்தும் சேர்த்தும் எழுதும் பொழுது, அது படிக்க சற்று கடினமாக ஆகிவிடுகிறது. அதே செய்யுளை, அதன் வார்த்தைகளை தனி தனியாக பிரித்து எழுதினால், படிப்பதற்கு இலகுவாகிறது.

உதாரணம்:

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

இதை பிரித்து எழுதினால்,

உழந்து உழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண்.

படிப்பதற்கு சுலபமாக இருக்கிறதல்லவா?

இப்பொழுது நம்மால் படிக்க முடிகிறது. ஆனால் அர்த்தம் புரிகிறதா?. எனக்கு புரியவில்லை.

காரணம் 2: தமிழ் சொற்தொகையில் புலமை இன்மை.

தமிழில் இலட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. ஆனால், அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் தமிழுக்கு சில நூற்றுக்கணக்கான சொற்களே போதும். நீங்கள் கவிஞராகவோ, கதாசிரியராகவோ இருந்தால் சில ஆயிரம் சொற்கள் மட்டுமே போதும்.

சில நூற்றுக்கணக்கான சொற்களை மட்டும் தெரிந்துகொண்டு, இலட்சக்கணக்கான சொற்களை கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களை புரிந்துகொள்வது சாத்தியமில்லை. தமிழ் அகராதி நமக்கு தேவைப்படுகிறது. சங்க இலக்கியங்களை தமிழ் அகராதியை வைத்துக்கொண்டு படிக்கும் பொழுது, அந்த சொற்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் பொழுது, அந்த சொல்லும் பொருளும் நம் மனதில் ஆழமாகப் பதியும். வெகு விரைவில் நமக்கு புரிந்த சொற்தொகையின் எண்ணிக்கை கூடி கொண்டே போகும். நாம் படித்திராத இலக்கியங்களையும் கூட எளிதாக படித்து புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட குறளிலுள்ள சொற்களின் பொருள் விளக்கம் இதோ.

உழந்து - வருந்தி
உள்நீர் - உள்ளேயுள்ள நீர்
அறுக - அற்றுப்போக
விழைந்து - விரும்புதல்
இழைந்து - இணைதல்
வேண்டி - விரும்புதல்
அவர் - அவர், காதலர்
கண்ட - பார்த்த
கண் - கண்

இப்பொழுது உங்களால் இக்குறளை சுலபமாக படிக்க முடியும். இக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தமும் தெரியும். ஆனாலும் எனக்கு, இந்த குறள் சொல்ல வரும் கருத்து முழுமையாக விளங்கவில்லை.

காரணம் 3: சொற்றொடர் வரிசை மாறி இருப்பது

ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அவர் தம் பாணியில் தம் விருப்பம் போல் சொற்றொடர்களை மாறி அமைத்து செய்யுளை வடிவமைப்பது உண்டு. இதை குற்றம் என்று சொல்ல முடியுமா என தெரியவில்லை. இப்படி மாற்றி எழுதுவதால் ஏதாவது பயனுண்டா என்றும் தெரியவில்லை. ஒருவேளை இலக்கண விதிகளுக்காகவும், எதுகை மோனைக்காகவும் இருக்கலாம். திருவள்ளுவருக்கு இப்படி சொற்றொடர்களை மாற்றி எழுதுவது பிடிக்கும் என நினைக்கிறேன்.

இதே திருக்குறளை, சொற்றொடர் வரிசை மாற்றி அமைத்து பார்ப்போமா?

விழைந்து இழைந்து வேண்டி அவர் கண்ட கண், உழந்து உழந்து உள்நீர் அறுக.

ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதல்லவா?. சொற்களின் பொருளை பொருத்தி பார்க்கும் போது,

வேண்டி விரும்பி தன் காதலரை கண்ட கண்கள், வருந்தி வருந்தி தன்னிடம் உள்ள நீர் (கண்ணீர்) அற்று போகட்டும்.
‐ காதலரை பிரிந்து வாடும் காதலியின் புலம்பல்.

உங்களுக்கு இக்குறள் இப்போது புரிகிறதா?

எனக்கு புரிகிறது.

அடுத்தது என்ன?

சங்க இலக்கியங்களில் இருந்து ஒரு இலக்கியத்தை தேர்ந்தெடுத்து, அந்த இலக்கியத்தை உரைகளின் துணை இல்லாமல் அகராதியின் துணையோடு நான் புரிந்துகொள்ள முயற்சி செய்யப் போகிறேன். என்னுடைய புரிதலை தொடர்பதிவாக எழுத இருக்கிறேன்.

அது சொல்லப்பட்ட கருத்தின் தொன்மையும், ஆழமும் தெரியாமல் முதிர்ச்சி இல்லாத ஒரு அடிமட்ட புரிதலாக இருக்கலாம். அல்லது பண்டைய இலக்கியத்தை இருபதாம் நூற்றாண்டு இளைஞனின் வாழ்வியல் மூலமாக பார்க்கும் கண்ணோட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது என்னுடைய புரிதல். மிக தவறாக இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். என் புரிதலை மேம்படுத்தி கொள்கிறேன்.

நான் புரிந்துகொள்ள போகும் முதல் இலக்கியம் - அகநானூறு.

முகப்பு > வலைப்பதிவுகள்



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

copyleft @ 2009.